கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதன் பிறகு நாட்டாமை, முத்து, விஷ்ணு, அவ்வை சண்முகி, மிஸ்டர் ரோமியோ, சூர்ய வம்சம், படையப்பா என 90களில் கொடிகட்டி பறந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார் கனல் கண்ணன்.
இந்து முன்னணியில் இணைந்து ஹிந்து மதத்தை ஆதரித்து பேசுகிறேன் என்ற பெயரில் மேடை ஏறினார். மேடை ஏறியவரின் ஒவ்வொரு பேச்சிலும் சர்ச்சைகள் மட்டுமே உருவாகின.
மதபோதகர் ஒருவர் பெண்ணுடன் ஆடும் வீடியோ ஒன்றை கனல் கண்ணன் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ தமிழ் பாடலுடன் எடிட் செய்யப்பட்டிருந்தது.
திமுகவைச் சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சாதி, மத ரீதியான சொற்களை பயன்படுத்துவது, பிரிவினையை தூண்டுவது என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் துறையினர் கனல் கண்ணனை கைது செய்தனர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.