நடிகர் அஜித்குமார் பிரேம புத்தகம் என்ற தெலுங்குப்படத்தில்தான் முதலில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 1992ம் ஆண்டில் வெளியானது. சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை இந்தப் படம் அஜித்திற்கு பெற்றுத் தந்தது. தொடர்ந்து தமிழில் அமராவதி என்ற படத்தில் நடித்து தன்னை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகம் செய்துக் கொண்டார். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை அஜித்திற்கு பெற்றுத் தரவில்லை என்றபோதிலும் தொடர்ந்து அடுத்த ஆண்டில் வெளியான பவித்ரா அஜித்திற்கு சிறப்பாக அமைந்தது.
ஆனாலும் 1995ம் ஆண்டில் அஜித் நடிப்பில் வெளியான ஆசை படம்தான் அவரது கேரியரில் பெஸ்ட்டாக அமைந்த படங்களில் ஒன்றாக மாறியது. இந்தப் படத்தில்தான் முழுமையான ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தினார் அஜித். தொடர்ந்து வாலி, காதல்கோட்டை என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ள அஜித், ஒருகட்டத்தில் தன்னை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிக் கொண்டார். தொடர்ந்து அமர்க்களம் உள்ளிட்ட அடுத்தடுத்த ஆக்ஷன் படங்களில் நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
சமீபத்தில் அஜித்தின் துணிவு படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. இந்நிலையில் அடுத்ததாக மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் அஜித் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.
இந்நிலையில் அஜித் சினிமாவில் அறிமுகமாகி தற்போது 31 ஆண்டுகளை கடந்துள்ளார். இதை அவருடைய ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அஜித்திற்கு தமிழில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் அஜித்தின் 31வது ஆண்டு கொண்டாட்டத்தை அடுத்து கர்நாடகாவில் அவரது ரசிகர்கள் 600 அடி பேனர் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.