இயக்குநர் வெற்றிமாறன் இன்று 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இவர், 2007ம்ஆண்டு நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தை இயக்கினார். இயக்குநராக அறிமுகமான முதல் படமே வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்று கொடுத்தது. இதையடுத்து, ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 மொத்தம் ஆறு படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடும் இயக்குநராக இருக்கிறார்.
ஆடுகளம் படம் ஆறு தேசிய விருதையும், அசுரன் படத்திற்கு சிறந்த மாநில மொழிப் படத்துக்காகவும் மற்றும் சிறந்த நடிகருக்காக தனுஷுக்கும் என 2 தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது. இதேபோல் விசாரணை திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. வெனிஸ் சரவதேச விழாவில் கௌரவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் விடுதலை பாகம் 1 வெளியானது. அப்படத்தில் அப்பாவி மக்களை விசாரணை என்ற பெயரில் அடைத்து வைத்து காவல் துறை செய்யும் சித்திரவதையை தோல் உரித்துக்காட்டி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.