சமீபகாலமாக இசையமைப்பாளர்களின் கச்சேரிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வாரத்தின் கடைசி சனி மற்றும் ஞாயற்று கிழமைகளில், ஏ.ஆர். ரஹ்மான் அனிருத் போன்ற உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் கச்சேரிகள் நடத்தி வருகிறார்கள். சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்.10) நடைபெற்றது.
இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபகாலங்களில் இப்படி ஒரு மோசமான நிகழ்ச்சி ஏற்பாட்டை பார்த்ததில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த குளறுபடி முழு பொறுப்பேற்று மன்னிப்புக் கோரியுள்ளது.