ஒரு நடிகனுக்கு உடல்மொழி என்பது மிகவும் இன்றியமையாத அம்சம். வசன உச்சரிப்பு, விதவிதமான ஒப்பனை உள்ளிட்டவற்றைத் தாண்டி பார்வையாளர்களை காட்சியினூடே ஒன்றச் செய்வதில் நடிப்பவர்களின் உடல்மொழிக்கு முக்கிய பங்குண்டு. தமிழ் திரையுலகில் அபாரமான உடல்மொழி கொண்ட வெகுசில நடிகர்களில் ஒருவரும், தனது நகைச்சுவை திறனால் திரையிலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருப்பவருமான வடிவேலு இன்று தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
80 மற்றும் 90களில் நகைச்சுவை என்றாலே கவுண்டமணி – செந்தில்தான் என்று இருந்த நிலையில், சிறு சிறு வேடங்களில் நடித்து தனது திறமையை உலகுக்கு காட்டி படிப்படியாக தனக்கென ஒரு இடத்தை நிறுவினார் வடிவேலு. டி.ராஜேந்தரின் ‘என் தங்கை கல்யாணி’யில் ஒரு சிறிய ரோல் செய்திருந்தாலும், ராஜ்கிரண் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில்தான் வடிவேலு வெளியில் தெரிந்தார். அதில கவுண்டமணியிடம் ‘சவுக்கியமான்னு கேட்டது ஒரு குத்தமாண்ணே’ என்று கேட்டு மிதிவாங்கும் காட்சி மிகவும் பிரபலமானது. தனது முதல் படத்திலேயே சிறப்பான உடல்மொழியை வெளிப்படுத்தியிருப்பார்.
1996ஆம் ஆண்டு சீமான் இயக்கத்தில் வெளியான ’பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படம் வடிவேலுவின் திரைவாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. அதில் இடம்பெற்ற அனைத்து காமெடி காட்சிகளும் பெரும் வரவேற்பை பெற்றன. இதில் வரும் ‘சோனமுத்தா போச்சா’ வசனம், போதையில் பாயுடன் சண்டையிடும் காட்சி உள்ளிட்டவை இன்று வரை சமூக வலைதளங்களில் மீம்களாக வலம் வருகின்றன.
அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்கி, சில தோல்விகளுக்குப் பிறகு தற்போது மீண்டு வந்திருக்கும் வடிவேலு அண்மையில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் ஒரு புதிய பரிமாணத்தை காட்டியிருந்தார். ரசிகர்களின் மனதில் வடிவேலுக்கான இடம் அப்படியேதான் உள்ளது என்பதை அந்த கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பு உறுதிப்படுத்தியது. ரத்தத்திலேயே நகைச்சுவை ஊறிய தன்னிகரில்லா கலைஞன் வடிவேலு இன்னும் பல பரிமாணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று அவரது இந்த பிறந்தநாளில் வாழ்த்துவோம்