சந்திரமுகி2 படத்தில் பல வருடங்களாக மூடியிருக்கும் சந்திரமுகி அரண்மனையை வடிவேலு பெயரில் பிரபு எழுதிக்கொடுத்துவிட்டார், இந்த நேரத்தில் ராதிகாவின் குலதெய்வம் இதே ஊரில் இருக்க, அவர்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகள் நடக்கின்றது.
அந்த நேரத்தில் ஒரு குருநாதர் கண்டிப்பாக அந்த குலதெய்வ கோவிலுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று சொல்ல ராதிகா தன் குடும்பத்துடன் சந்திரமுகி ஊருக்கு செல்கின்றனர். சென்ற இடத்தில் தங்க சந்திரமுகி அரண்மனையையே வாடகைக்கு எடுக்க, பிறகு என்ன சந்திரமுகி முதல் பாகத்தில் என்ன நடந்ததோ, அதையே லாரன்ஸ், கங்கனா தோற்றத்தில் பார்க்க வேண்டியது தான்.
சந்திரமுகி இரண்டாம் பாகம் என்பதை எதோ பெயருக்கு என்றில்லாமல் ப்ராப்பர் சீகுவலாக இதை கொண்டு வந்ததற்கு பி.வாசுவை பாராட்டலாம், வடிவேலுவும் தன் பங்கிற்கு சிரிப்புக்காட்ட முயற்சிறார்.
படத்தின் முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாகவே செல்கிறது, அதிலும் சந்திரமுகி யாருக்குள் இருக்கிறார், என்று ஸ்ருஸ்டி, லக்ஷ்மி மேனன், மஹிமா, ராதிகா என சோதிக்கும் இடம் நம்மை திரையுடன் ஒன்ற வைக்கின்றது.
ஆனால், அதன் பின் சந்திரமுகி, வேட்டையன் ப்ளாஷ்பேக் நன்றாகவே இருந்தாலும், எதோ மிஸ் ஆன பீல் தான், அதிலும் கங்கனா மிகவும் அந்நிய முகமாக தெரிகிறார் தமிழ் ஆடியன்ஸிற்கு. எந்த காட்சி எடுத்தாலும், இதை தான் சந்திரமுகியிலேயே பார்த்துவிட்டோமே, என்று கிளைமேக்ஸ் வரை கேட்க வைக்கும் காட்சி அமைப்புக்கள்.
மொத்தத்தில் சந்திரமுகியில் பிரபு சொல்லும் வசனத்தையே நாமும் சொல்லலாம். ‘என்ன கொடுமை வாசு சார் இது..?’