ஆந்திராவில் பிறந்து வளர்ந்த நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் நடிக்க ஆரம்பித்த பிறகு இவர் இல்லாத தெலுங்கு படங்களே ரிலீஸ் ஆகவில்லை என்கிற அளவுக்கு டோலிவுட்டில் தனியொரு மனிதனாக பல படங்களில் இரவு பகல் பாராமல் நடித்து 1100 படங்களில் நடித்து கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார் பிரம்மானந்தம். சுமார் 35 ஆண்டுகள் சினிமாவில் காமெடியனாக நடித்து கலக்கிய இவர் அனைத்து முன்னணி டோலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களின் ஃபேவரைட் நடிகரே பிரம்மானந்தம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் டாப் கமெடி நடிகராக வலம் வந்த பிரம்மானந்தம் எஸ்.ஜே. சூர்யா இயக்கி ஹீரோவாக நடித்த நியூ படத்தின் மூலம் தமிழ் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த படம் கில்லி பின்னர் மொழி, சரோஜா, சத்யம், குசேலன், தோனி, ஜில்லா, அஞ்சான், லிங்கா, வாலு, தானா சேர்ந்த கூட்டம் கடந்த ஆண்டு வெளியான சந்தானத்தின் கிக் என பல தமிழ் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
ஒரு படத்துக்கு சுமார் 4 முதல் 6 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறாராம் பிரம்மானந்தம். 1100 படங்களில் நடித்தும் விளம்பரங்கள், தயாரிப்பு நிறுவனம் என பல்வேறு வகையில் இவர் சம்பாதித்து சேர்த்த சொத்து மட்டும் ஒட்டுமொத்தமாக 490 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி பிரம்மிக்க வைக்கின்றன.