பல ஆண்டுகளாக கன்னட திரையுலகில் மிக முக்கியமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் யாஷ். இவரது வாழ்க்கையில் கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி சர்வதேச அளவில் அங்கீகாரத்தை உருவாக்கியுள்ளது.
யாஷ் அடுத்ததாக தமிழ் பட இயக்குநரின் இயக்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்தியின் சர்தார் படத்தின் இயக்குநர் பிஎஸ் மித்ரன் தான் அடுத்ததாக யாஷை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தியின் கேரியரில் சிறப்பாக அமைந்த படம் சர்தார். இந்நிலையில் யாஷ் -மித்ரன் கூட்டணி சிறப்பாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக நிலேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தை மையமாக கொண்ட படத்தில் யாஷ் ராவணனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தில் நடிக்க யாஷ் விருப்பப்பட்டதாகவும் ஆனால் தான் எதிர்மறை கேரக்டரில் நடிப்பதை தன்னுடைய ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் அவர் நடிக்க மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ரசிகர்களின் விருப்பத்திற்கு மாறாக தான் நடிக்க விரும்பவில்லை என்றும் அவர் தனது பேட்டியொன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் மித்ரன் இயக்கத்தில் அவர் அதிரடி ஆக்ஷன் கதையில் இணையவுள்ளது அவரது ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.