பெங்களூரு சம்பவம் குறித்து சித்தார்த்தின் பதிவு !

by vignesh

நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சித்தார்த் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தபோது அங்கு நுழைந்த கன்னட அமைப்பினர் தகராறில் ஈடுபட்டு,  அவரை அங்கிருந்து வெளியேறுமாறு முழக்கம் எழுப்பினர். இதையடுத்து, நன்றி தெரிவித்துக்கொண்டு நடிகர் சித்தார்த் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் இந்த விவகாரம் குறித்து சித்தார்த் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: முதன்முறையாக ஒரு தயாரிப்பாளராக, என்னுடைய திரைப்படம் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பாகவே பலருக்கும் அதை திரையிட்டுக் காட்டினேன்.  ரிலீசுக்கு முன்பாக சுமார் 2,000 மாணவர்களுக்கு இப்படத்தை காட்ட திட்டமிட்டிருந்தேன். இதுவரை அப்படி யாரும் செய்ததில்லை. அன்றிரவு கன்னட நட்சத்திரங்களுக்கும் படத்தை திரையிடும் திட்டமும் இருந்தது. ஆனால், காவிரி போராட்டத்துக்கு மதிப்பளித்து நாங்கள் அனைத்தையும் ரத்து செய்தோம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் அதையும் தாண்டி ஒரு நல்ல படத்தைப் பற்றி அங்கிருந்தவர்களுடன் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது.

கலந்துரையாடலுக்குப் பிறகு பத்திரிகையாளர்கள் படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அங்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். அதுவும் பல கேமராக்களுக்கு முன்னால் நடந்தது. நான் அது பற்றி பேச விரும்பவில்லை. என் படத்துக்கும் காவிரி பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது பணத்தை செலவழித்து நான் தயாரிக்கும் படங்களில் எனது சமூகப் பொறுப்பு வெளிப்படும் என்று நம்புகிறேன்.

You may also like

Leave a Comment