நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதாலும்; இந்தப் படத்தின் ஹிட் அவருக்கு அவசியம் தேவை என்பதாலும் ரொம்பவே எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் தலைவர் தரிசனத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களை திருவிழா போல் மாற்றியிருக்கின்றனர்.
9 மணிக்கு இங்கு முதல் காட்சி திரையிடப்பட்டாலும் ரசிகர்கள் அதற்கு முன்னதாகவே திரையரங்குகளுக்கு முன்னர் குழும ஆரம்பித்தனர். ஒருவழியாக 9 மணிக்கு முண்டியடித்து தியேட்டருக்குள் சென்றவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று பெயர் வரும் இடத்திலேயே கரகோஷம் எழுப்பி, விசில் அடித்து கொண்டாடினார். இந்தச் சூழலில் படத்தின் முதல் பாதி குறித்த விமர்சனம் தெரியவந்திருக்கிறது.
ஏற்கனவே தகவல் வெளியானபடி தன்னுடைய மகனை காப்பாற்ற போராடும் தந்தையின் கதைதான் ஜெயிலர் ஒன்லைன் என்பது உறுதியாகியிருக்கிறது. நேர்மையான காவல் துறை அதிகாரியாக இருக்கும் வசந்த் ரவி ஒரு சட்டத்திற்கு விரோதமான செயலை (என்னவென்று படம் பார்த்து தெரிந்துகொள்ளலாமே) தடுக்க முயல்கிறார். அது அவருக்கும், வில்லனுக்குமான மோதலாக விரிகிறது.
படத்தின் முதல் பாதியில் வெகுநேரம் ரொம்ப ஸ்லோவாக செல்கிறது என்கின்ற ஒரு கருத்தும் தியேட்டரிலிருந்து கேட்கிறது. அதேசமயம் புயலுக்கு முன் ஒரு அமைதி இருக்குமே. அப்படித்தான் அந்த அமைதி. அதுவரை ஒரு குடும்பஸ்தனாக பொறுப்புள்ள கணவனாக,தகப்பனாக இருக்கும் முத்துவேல் பாண்டியன் தனது குடும்பத்தை ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு வில்லன்களிடம் மோதும்போது புலியாக மாறி சீறுகிறார்.
அந்த சீன்தான் இடைவேளை காட்சி. அந்தக் காட்சியில் ஒட்டுமொத்த தியேட்டரும் தெறிக்கிறது. ரஜினிக்கான உச்சக்கட்ட மாஸ் காட்சி அதுதான் என கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். அதனால் முதல் பாதி தங்களுக்கு திருப்தி தந்ததாகவும் கூறுகின்றனர். அதற்கு பிறகு முத்துவேல் பாண்டியனுக்கு ப்ளாஷ்பேக்கும், மகன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கான விடையும் இரண்டாம் பாதியில் இருக்கிறது.