கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘ஜிகர்தண்டா 2′. இந்தப் படம் தீபாவளியன்று வெளியாகிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:
‘ஜிகர்தண்டா’ படத்தின் சேது கேரக்டருக்கு முதலில் ராகவா லாரன்ஸிடம்தான் நடிக்கக் கேட்டேன். அப்போது சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. படம் வெளியானபிறகு அவர், சேர்ந்து படம் பண்ணலாம் என்றார்.
இந்தப் படம் 1975-ல் நடக்கும் கதையைக் கொண்டது.‘ஜிகர்தண்டா’வுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பில்லை. இதில் ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டராகவும் எஸ்.ஜே.சூர்யா சினிமா இயக்குநராகவும் நடித்திருக்கிறார்கள். படத்தை மலைக்கிராமம் ஒன்றில் படமாக்கினோம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 65 பேரைத் தேர்வு செய்து, சூரி என்பவர் மூலம் 2 மாதம் பயிற்சி அளித்தோம். அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.