இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் முதல் தயாரிப்பு என்று விளம்பரம் செய்யப்பட்டு பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘எல்ஜிஎம்’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.
உயர் நடுத்தர வர்க்க ஐடி இளைஞர் கவுதம் (ஹரீஷ் கல்யாண்). சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர், தனது தாய் லீலாவின் (நதியா) அரவணைப்பில் வளர்கிறார். தன்னோட பணிபுரியும் மீராவிடம் (இவானா) தனது இரண்டு ஆண்டு காதலைச் சொல்லி அவரது வீட்டுக்கு தன் தாயுடன் பெண் கேட்டுச் செல்கிறார். பெண் பார்க்கும் நிகழ்வின்போது நடக்கும் உரையாடலின்போது திருமணத்துக்குப் பின் தன்னால் கூட்டு குடும்பமாக வாழ இயலாது என்று கூறி திடீரென திருமணத்தை நிறுத்துகிறார் நாயகி. பின்னர் சிறிய மனமாற்றத்துக்குப் பிறகு தன் வருங்கால மாமியாருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் அதற்கு பழகிப் பார்க்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு ஒரூ டூர் ஏற்பாடு செய்கிறார் நாயகி. சில பல பொய்களை சொல்லி தன் தாயை சுற்றுலா வருவதற்கு சம்மதிக்க வைக்கிறார் நாயகன். நாயகிக்கும், நாயகனின் அம்மாவுக்கு இடையே மன ஒற்றுமை ஏற்பட்டதா, இறுதியில் நாயகனின் காதல் வென்றதா என்பதே ‘எல்ஜிஎம்’ படம் சொல்லும் கதை.
முதல் பாதியில் இருந்த ஓரளவு சுவாரஸ்யமான திரைக்கதையை இரண்டாம் பாதியிலும் தக்கவைத்து, லாஜிக்கே இல்லாத ஜல்லியடிப்புகளை கத்தரித்திருந்தால் ஒருமுறையேனும் பார்க்கக் கூடிய படமாக வந்திருக்கும் இந்த ‘எல்ஜிஎம்’. பெரும் எதிர்பார்ப்புடன் தோனியின் முதல் தயாரிப்பு சிக்ஸர் அடிக்காமல் பரிதாபமாக டக் அவுட் ஆகி நிற்கிறது.