நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது ஜெயிலர். இந்தப்படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது படம்.
நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, அனிருத், நெல்சன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் குட்டி கதை ஒன்றையும் கூறிய ரஜினிகாந்த், நெல்சன் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். முதல் நாள் சூட்டிங்கில் முதல் ஷாட்டை எடுத்து முடித்த நெல்சன், தன்னிடம் வந்து, தன்னுடைய முதல் காதல் குறித்து கேட்டதாகவும் ஏன் இதை கேட்கிறீர்கள் என்று தான் பதில் கேள்வி கேட்டதாகவும் ரஜினி குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய நெல்சன், தன்னை சார்ஜ் செய்துக் கொள்ளவே இதை கேட்பதாக கூறியதாகவும் இதையடுத்து இது என்னடா புதுசா இருக்கு என்று தான் திகைத்ததாகவும் ரஜினி தன்னுடைய பேச்சில் கூறினார்.