தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்பவரும், இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் என்று ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் மதிக்கப்படுபவருமான சூர்யாவின் பிறந்தநாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு இதோ..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் மகனாக இருந்தாலும் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, ஒரு தனியார் கார்மென்ட்ஸில் மாதம் ரூ.1200 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
வேலை ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கிய ‘நேருக்கு நேர்’ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக வாய்ப்பு தேடி வந்தது. அந்த இன்னொரு ஹீரோ விஜய்.
சரவணன் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே வெறொரு நடிகர் இருந்த காரணத்தால் சரவணனை சூர்யாவாக மாற்றினார் மணிரத்னம்.
விஜய் உடன் ‘நேருக்கு நேர்’, முரளியுடன் ‘காதலே நிம்மதி’ என டபுள் ஹீரோ சப்ஜெக்ட்களில் நடித்து வந்த சூர்யா முதல்முறையாக தனி ஹீரோவாக களமிறங்கிய படம் ‘சந்திப்போமா’. ஆனால் படம் படுதோல்வி அடைந்தது.
தொடர்ந்து ‘பெரியண்ணா’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரிலே கலந்தது’, ‘ஃப்ரெண்ட்ஸ்’ ஆகிய படங்களில் நடித்தாலும் சூர்யாவுக்கென ஒரு தனி இடம் தமிழ் சினிமாவில் உருவாகவில்லை. ‘நந்தா’ படத்தின் மூலம் அந்த குறையை தீர்த்து வைத்தார் பாலா.
’நந்தா’ படத்துக்கு முன்பு வரை சாக்லேட் பாய் ரோல்களிலேயே வலம் வந்து கொண்டிருந்த சூர்யா அதன்பிறகு ரக்கட் பாய் ஆகவும் அசத்தினார்.
அதன் பிறகு அமீரின் ‘மௌனம் பேசியதே’-வில் காதலை வெறுக்கும் சிடுமூஞ்சி இளைஞன், கவுதம் மேனனின் ‘காக்க காக்க’-வில் மிடுக்கான போலீஸ் அதிகாரி என அடுத்தடுத்து சூர்யாவின் கேரியர் கிராஃப் ஏறிக் கொண்டே சென்றது.
மீண்டும் பாலாவுடன் கைகோத்து ‘பிதாமகன்’ மூலம் தனக்கு அபாரமான நகைச்சுவை திறனையும் வெளிப்படுத்தினார்.
ஒரே போன்ற பாத்திரங்களில் தொடர்ந்து நடிக்காமல் ’பேரழகன்’, ‘ஆயுத எழுத்து’, ‘கஜினி’, ‘வாரணம் ஆயிரம்’ என மாறுபட்ட கதைக்களங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அயன்’ படம் சூர்யாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களின் ஆதர்சங்கள் அஜித் – விஜய் என்பதை அஜித் – விஜய் – சூர்யா என்று மாற்றியது இப்படம்.
2006ஆம் ஆண்டு அகரம் அறக்கட்டளையை தொடங்கிய சூர்யா கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களை தேர்வு செய்து கல்வி உதவிகளைச் செய்து வருகிறார்.
2008ஆம் ஆண்டு அகரம் அமைப்புக்காக ‘படிச்சாதான் ஹீரோ. இல்லனா ஜீரோ’ என்ற குறும்படத்தை வெளியிட்டார். இதில் சூர்யாவுடன், விஜய், ஜோதிகா, மாதவன் ஆகியோரும் நடித்திருந்தனர்.
அகரம் தவிர்த்து ‘வழிகாட்டி’, ‘விதை’ ஆகிய பெயர்களில் திட்டங்களை உருவாக்கி மாணவர்களின் கல்விக்காக அகரம் மூலம் உதவி வருகிறார் சூர்யா. இந்த திட்டங்களின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக் கனவு நிறைவேறியுள்ளது.
ஆதரவற்ற பெண்கள் முன்னேற்றத்துக்காக ’36 வயதினிலே’, கிராமப்புற மக்களுக்கு உதவுவதற்காக ’நமது கிராமம்’ ஆகிய திட்டங்களையும் அகரம் மூலம் முன்னெடுத்து வருகிறார்.
நீட் தேர்வு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை, திரைப்பட தணிக்கை சட்டத் திருத்த மசோதா, புதிய கல்விக் கொள்கை என மக்களுக்கும் எதிரானவை என்று விமர்சிக்கப்படும் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரே நடிகராகவும் சூர்யா இருந்து வருகிறார்.
வெகுஜன ரசிகர்களுக்கான படங்களில் நடித்து வந்தாலும், வெற்றியோ தோல்வியோ ஒரு நடிகராக தன்னை நிரூபிக்கும் பரிசோதனை முயற்சிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருகிறார் சூர்யா.
திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி துணிச்சலுடன் ‘சூரரைப் போற்று’ படத்தை ஓடிடியில் வெளியிட்டார். இப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.
உண்மைச் சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படத்தில் மாஸ் காட்சிகள் வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும், அதனை முற்றிலுமாக தவிர்த்து மற்ற கதாபாத்திரங்களுக்கு வழிவிட்டு, சமூக பிரச்சினையை உரக்க பேசியிருந்தார்.
பான் இந்தியா படமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தில் இதுவரை ஏற்காத ஒரு பாத்திரத்தில் சூர்யா மிரட்டியுள்ளதை இன்று வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோ மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது.
திரையிலும் திரைக்கு வெளியிலும் தொடர்ந்து சிறந்த பங்களிப்புகளை ஆற்றிவரும் சூர்யாவின் பயணம் இன்னும் பல வெற்றிகளையும் புதிய உயரங்களையும் அடைய மனதார வாழ்த்துவோம்.