மகனின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி வரையிலான ‘ரோட் ட்ரீப்’ ஒன்றுக்கு திட்டமிடுகின்றனர் மீரா (த்ரிஷா) குடும்பத்தினர். இதில் மீரா கர்ப்பமாக இருப்பதால் அவர் அந்தப் பயணத்தை தவிர்க்க, மகனும் கணவரும் செல்லும் கார் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு நேர்கிறது. ஏற்கெனவே இந்த நெடுஞ்சாலையில் பலர் இவ்வாறு மரணித்திருப்பதை அறிந்து விசாரணையில் இறங்குகிறார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன.
இதற்கு மறுபுறம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் மாயா (‘டான்சிங் ரோஸ்’ ஷபீர்) மாணவி ஒருவரின் பொய்க் குற்றச்சாட்டால் கல்லூரியில் இருந்து நீக்கப்படுகிறார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மாயாவுக்கு வேறு கல்லூரியில் வேலை கிடைக்காததால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்க, இழப்பு ஒன்றையும் சந்திக்கிறார். வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் இந்த இரண்டு கதைகளும் சந்திக்கும் புள்ளியே ‘The Road’ (தி ரோட்) படத்தின் திரைக்கதை.
வாழ்வில் பணம் எத்தனை முக்கியமானது என்பதை மையப்படுத்திய கதை பாதை வழி தெரியாமல் மாறி சென்றதால் திரைக்கதையில் பெரும் விபத்து நேர்ந்திருக்கிறது. “எங்கையோ பொறந்து எங்கேயோ வளர்ந்து இங்க வந்து உசுற விடறாங்க” என்ற படத்தின் வசனம் குறியீடாக எதையோ உணர்த்துகிறது.