ஐடி பணியில் திறமை மிக்கவர்களாக இருந்தாலும் வேலை அழுத்தம் காரணமாக அலுவலகத்திலேயே போதை மருந்து உட்கொள்ளும் அளவுக்கு அப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.
தங்கள் சக ஊழியர்கள் தீபா, விக்ரம் ஆகியோரின் திருமணத்தைக் கொண்டாடுவதற்காக ஒரு நாள், பார்ட்டிக்கு செல்கிறார்கள். மது போதையில் இருக்கும் தீபா உட்பட நான்கு பெண்களும் மர்ம நபரால் (நட்டி என்கிற நட்ராஜ்) கடத்தப்படுகிறார்கள்.
ஒரு பாழடைந்த வீட்டுக்குள் நாள்கணக்கில் அடைத்துவைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அங்கு ஏற்கெனவே கடத்தி வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு பெண், துன்புறுத்தப்படுகிறார். அங்கிருந்து தப்பிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைகின்றன. காவல்துறையும் இவர்களை மீட்க முடியாமல் திணறுகிறது. அவர்கள் ஏன் கடத்தப்பட்டார்கள், அவர்களுக்கு இறுதியில் என்ன ஆனது? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப் படம்.
ஷில்பா மஞ்சுநாத் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் தன் அம்மாவை நினைத்து கண்ணீர் சிந்தும் காட்சியில் உணர்வுபூர்வமாக பார்வையாளர்களால் ஒன்ற முடிகிறது, ஷாஸ்வி, சுபாப்ரியா ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். சைக்கோத்தனமான வில்லன் கதாபாத்திரம் நட்டிக்குப் பொருந்தவில்லை. இறுதிப் பகுதியில் மட்டுமே அவரை ரசிக்க முடிகிறது. கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை பரவாயில்லை.
மது, போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வைத் தர முயன்றிருக்கும் ‘வெப்’ பலவீனமான திரைக்கதையால் தன் இலக்கை அடையத் தவறுகிறது