மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருந்தபோதே வாழை என்ற படத்தை தொடங்கிவிட்டார். அந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். படமானது முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் எழுதிய பேய் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாக தெரிகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் மாமன்னன் படத்தில் உதயநிதியின் நடிப்பை பாராட்டி வந்த விமர்சனத்தை மாரி செல்வராஜ் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், “நன்றி மாரி செல்வராஜ் சார். வாழை உங்களின் சிறந்த படைப்பு. உங்களது மேஜிக்கை பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என ட்வீட் செய்திருக்கிறார். முன்னதாக மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பும் பாராட்டை பெற்றது. குறிப்பாக பக்குவமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என பலர் கூறினர்.